ஒரு நாள், விவசாயி ஒருத்தர் தன் ஏர் கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு தன் வயலுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போ ஒரு வேலியோரம் எதேர்ச்சையாகப் பார்வை பட, ஏதோ ஒன்று பெரிதாகக் கண்ணில் பட்டது.
“இவ்ளோ பெருசா!” நம்ப முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தார். நன்றாக உருண்டு திரண்ட ஒரு பெரிய பரங்கிக்காய் அது. “இவ்ளோ பெரிய பரங்கிக்காய் நான் இதுவரை பார்த்ததில்லை” என்று ஆச்சரியப்பட்டார். இந்த அதிசயப் பரங்கிக்காயை ராஜாவிற்குப் பரிசளிக்கலாம் என்று தலையில் தூக்கிக்கொண்டு ராஜாவின் மாளிகைக்கு நடந்தார்.
பெரிய்ய்யப் பரங்கிக்காயைப் பார்த்ததும் ராஜாவுக்குப் பரவசம். “உலகிலேயே இதுதான் மிகப்பெரியப் பரங்கிக்காயாக இருக்க வேண்டும்” என்று ஆச்சரியமாகக் கூறினார் ராஜா. விவசாயியின் அன்பளிப்பைப் பெற்று மகிழ்ந்து, அவருக்குப் பொற்காசுகள் பரிசளித்து அனுப்பிவைத்தார்.
விவசாயியின் அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சு. அதைக் கேள்விப்பட்டார் ஒரு பணக்கார வியாபாரி. “பரங்கிக்காய்க்கேப் பொற்காசுகளா! அப்போ ராஜாவுக்கு என்னிடமுள்ள இந்த அழகிய முத்துமாலையைப் பரிசளித்தால் அவர் எனக்கு என்னென்ன பரிசுகள் தருவார். வண்டி நிறைய வைரமும் ரத்தினமும் தருவாரோ?”என்ற ஆசையில் ராஜாவின் மாளிகைக்குச் சென்றார்.
அந்த முத்து மாலையை ராஜாவுக்குப் பரிசளித்தார். “ஆ! என்ன ஒரு அழகான முத்துமாலை” என்று ராஜாவும் அந்த முத்துமாலையைக் கண்டு மகிழ்ந்தார். “இந்த அழகான முத்துமாலைக்கு ஈடாக நான் உங்களுக்கு என்ன கொடுக்க முடியும்? இவ்வளவு விலை உயர்ந்த பரிசை எனக்களித்த உங்களிடம் ஏற்கனவே பொன்னும் பொருளும் ஏராளமாக இருக்கவேண்டும். அதனால் வேறொரு அரிய, பெரிய, அதிசயப் பொருளை உங்களுக்குப் பரிசளிக்கிறேன்.” என்று, விவசாயி கொண்டுவந்த அந்த பெரிய பரங்கிக்காயை வியாபாரிக்குப் பரிசளித்து அனுப்பினார் ராஜா.
ஏமாற்றத்துடன், அந்தப் பெரிய்ய்ய்யப் பரங்கிக்காயைத் தலையில் தூக்கிக்கொண்டு நடையைக் கட்டினார் வியாபாரி.