08-03-2021
காணாமற் போன பசுமாடு - 35வது கதை
பொழுது விடியுமுன்னே எழுந்து, பால் கறக்க வாளியைத் தூக்கிக்கொண்டு போனான் குப்பண்ணா. பட்டியில் போய்ப் பார்த்தால் பசுமாட்டைக் காணோம். சரி, கட்டு அவிழ்ந்துகொண்டு, அக்கம்பக்கத்து வயலில் போய் மேய்ந்துகொண்டிருக்கும் என்று தேடிப்பார்த்தான். அங்கேயும் காணவில்லை.
பாவம் அவன்; ஏழை விவசாயி. ஒற்றைப் பசுமாட்டை வளர்த்து, அது தரும் பாலைக் கறந்து விற்றுத்தான் வருமானம் அவனுக்கு. முதலுக்கே மோசம் போல், இப்போது அந்த பசுமாட்டைக் காணவில்லை.
“ஐயா, என் மாட்டைப் பார்த்தீர்களா?.. அம்மா, என் மாட்டைப் பார்த்தீர்களா?.. பட்டியில் தானே கட்டியிருந்தேன். எப்படிப் போச்சோ தெரியலியே?” என்று ஊர்க்கார்களிடம் புலம்பினான். ஆனால் யாருக்கும் அவன் மாட்டைப் பற்றிய விவரம் தெரியவில்லை. “அப்போ, இரவு எல்லோரும் தூங்கும்போது யாரோ திருடன் மாட்டை ஓட்டிக் கொண்டுபோயிருக்க வேண்டும்” என்று அனுமானித்துக்கொண்டான்.
தன் மாடு களவுபோனதைப் பற்றி ஊர்த்தலைவரிடம் சென்று தெரிவித்தான். அவர் அதை விவரமாகக் கேட்டுக்கொண்டு, ஊரிலுள்ள மற்ற விவசாயிகளிடம் திருடர்களைப் பற்றி எச்சரித்தார்.
“சரி, நரி தின்னக் கோழி கூவப் போறதில்ல.. காணாமப் போன மாடு இனி நமக்கு பால் தரப் போறதில்ல.. இன்னைக்குத் திங்கக்கிழம மேலப்பட்டி சந்தை. போனா ஒரு நல்ல பசுவாப் பாத்து வாங்கி வரலாம்” என்று நினைத்துக்கொண்டான். பால் விற்று சிறுகச்சிறுகச் சேர்த்தக் காசு மொத்தமும் எடுத்தக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.
செவலை, செம்பூத்து, பால் வெள்ளை, காரி என பல நிறங்களில் மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. நல்ல ஒரு மாடாக வாங்க வேண்டும் என்று சந்தை முழுதும் தேடி அலைந்தான் குப்பண்ணா.
அங்கே தூர, அவனது மாடு போலவே ஒரு மாடு இருப்பதைக் கண்டு அருகில் போய்ப் பார்க்க, “அட.. இது நம்ம மாடு.. கள்ளப்பய எவனோ நம்ம மாட்டத் திருடி இங்க விக்க ஓட்டி வந்திருக்கானே..” என்று எண்ணிக்கொண்டு, தன் மாட்டை வைத்துக்கொண்டிருந்தவரிடம் போய் முறையிட்டான். “ஐயா, இது என் மாடு.. இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?” என்று கேட்டான் குப்பண்ணா.
மாட்டை வைத்திருந்தவர் அதற்கு, “கிடைச்சதா? இது என் மாடப்பா.. நான் இதை ரெண்டு மூணு வருஷமாவே வளர்த்து வரேன்.” என்றார்.
இது நம்ம மாடு என்று எப்படி நிரூபிப்பது என்று யோசித்த குப்பண்ணா, சட்டென மாட்டின் இரு கண்களையும் தன் இரு கைகளால் பொத்திக்கொண்டு, “ஐயா ஊர்க்காரங்களே! இங்க கேளுங்க.. இது என் மாடு. நேத்து ராத்திரிலருந்து காணல. ஆனா இது இவர் மாடுன்னு விக்க ஓட்டி வந்திருக்காரு. உண்மையிலேயே இது இவர் மாடுன்னா, இந்த மாட்டுக்கு ரெண்டு கண்ணுல எந்த கண்ணு குருடுன்னு இவர் சரியா சொல்லட்டும், நான் இந்த மாட்டைக் கேக்கல.. இதுக்கு நீங்கல்லாம் சாட்சி” என்றான்.
அதற்கு அந்தத் திருடன், திகைத்துப் போய், ‘இடது கண் குருடு’ என்று உத்தேசமாகச் சொன்னான்.
“இடது கண்ணா?..” என்று குப்பண்ணா இழுக்க, “இல்லை.. இல்லை.. வலது கண்..” என்று இப்போது மாற்றிச் சொன்னான் அந்தத் திருடன்.
“ஐயா.. நீங்களே பாத்தீங்க.. முதலில் இடது கண் என்று சொன்னாரு. இப்போது வலது கண் ங்கிறாரு. ஆனால் உண்மையில் என் மாட்டிற்கு எந்தக் கண்ணிலும் பழுதில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.” என்றான் குப்பண்ணா.
அசட்டுத்தனமாக மாட்டிக்கொண்ட திருடன் அங்கிருந்து நழுவப் பார்க்க, சுற்றி நின்ற ஊர் மக்கள் அவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குப்பண்ணா அவன் மாட்டை ஓட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பினான்.
---
கதை மூலம்: Tinkle #006