ஒரு ராஜா இருந்தார். அப்பப்போ அவர் ஏதாவது முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துவிடுவார். அது நாட்டு மக்களுக்கு பெரும் கேடாக முடியும். அவருக்கு அமைந்த மந்திரி நல்ல அறிவாளி. ராஜாவிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது மந்திரி தான். இப்படியாகப் போய்க்கொண்டிருந்தது.
ஒரு கோடைக்கால இரவு. தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தார் ராஜா. மணிக்கூண்டிலிருந்து ‘தொம்’மென்று முரசு ஒலித்தது. மணி ஒன்று. மணிக்கொருமுறை ‘தொம் தொம்’ என்று ஒலித்துக்கொண்டிருக்கும்.
ஆறாவது முறையாக முரசு ஒலித்ததும் ராஜா எழுந்தார். இரவு சரியான தூக்கம் இல்லாததனால் சோர்வாக இருந்தது அவருக்கு. பசுமை நிறைந்த நாட்டுப்புறத்திற்குச் சென்றால் கொஞ்சம் உற்சாகமாக இருக்குமே என்று நினைத்தார்.
“யாரங்கே!” என்று சேவகரை அழைத்தார். சேவகர் வந்து வணங்கியதும் அவரிடம், “மந்திரியை ஆயத்தமாக இருக்கச்சொல். என் குதிரையையும் கிளப்பச் சொல்.” என்று ஆணையிட்டார்.
காலை உணவை முடித்துவிட்டு, மந்திரியையும் மேலும் சில காவல் வீரர்களையும் அழைத்துக்கொண்டு ராஜா புறப்பட்டார். சாலையோரம் பசுமையான மரங்கள், செடி,கொடிகள்,பயிர்கள் அடர்ந்த வயல்வெளி வழியே ஒரு மணிநேரத்திற்கும் மேல் சென்றனர். விளைந்து நின்ற வாழை, தென்னை, கம்பு, சோளம், நெல் மேலும் அழகழகான பூக்கள் இவை கண்டு ராஜா உற்சாகமானார்.
“ராஜா! இப்போது எப்படி இருக்கிறது உங்களுக்கு” என்றார் மந்திரி.
“ம்.. அமோகம் அமைச்சரே அமோகம்!” என்று கூறிவிட்டு, “எனக்குக் கொஞ்சம் தாகமாக இருக்கிறது. அந்த ஆற்றங்கரைக்குச் செல்வோம்” என்று அனைவரையும் அழைத்துச் சென்றார் ராஜா.
தெள்ளத்தெளிவான அந்த நீரோட்டம் கண்டு மகிழந்த ராஜா, “ஆமாம், இந்த நீர் எங்கே போகிறது?” என்று மந்திரியைக் கேட்டார்.
அது கீழை தேசத்திற்குப் பாய்கிறதைச் சொன்னார் மந்திரி.
சட்டென வெகுண்ட ராஜா, “என்ன? நம்முடைய ஆற்று நீர் அடுத்த நாட்டிற்குப் பாய்வதா? உடனடியாக நிறுத்துங்கள் இதை” என்று ஆணையிட்டார்.
“ஆனால் ராஜா..” என்று மந்திரி ஆரம்பிக்க, “ஆனாவும் இல்லை ஊனாவும் இல்லை. உடனடியாக இங்கே அணையைக் கட்டி ஆற்று நீரைத் தேக்க வேண்டும்” என்றார் ராஜா.
ராஜாவின் ஆணைப்படி ஓரிரு மாதங்களில் அணை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் நீரின் ஓட்டத்தைத் தடுத்து அணையைக் கட்டியதால் நீர் தேங்கி கரை வழிந்து ஊர்ப்புறங்களில் நீர் புகுந்தது; வயல்கள் வெள்ளக்காடாயின.
மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று மந்திரி எச்சரித்தார். “அதனால் என்ன? நம்முடைய ஆற்று நீர் நமக்கே ஆயிற்றே” என்று பெருமையுடன் சொன்னார் ராஜா.
ஊர் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. நீரைத் தடுத்ததற்கு கீழை நாட்டு மன்னன் நம் மீது போர் தொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. என்ன செய்வது? எப்படி ராஜாவைக்கொண்டே அந்த அணையை உடைக்கச்செய்வது? என்று சிந்தனையில் ஆழ்ந்தார் மந்திரி. ஒரு யோசனை தோன்றியது அவருக்கு.
மணிக்ககூண்டிற்குச் சென்று முரசு கொட்டுபவரிடம், “வழக்கமாக நீ மணிக்கொருமுறை முரசு கொட்டுவாயல்லவா! இன்று இரவு அரை மணிக்கொருமுறை முரசு கொட்டவேண்டும்” என்று பணித்தார்.
அதன்படியே, இரவு மூன்று மணிக்கெல்லாம் ஆறாவது முரசு ஒலிக்க, காவலில் இருந்த வீரர்கள் துணுக்குற்றனர். தூங்கிக்கொண்டிருந்த மற்ற காவலர்களையும் எழுப்பினர்.
அதற்குள் மணி ஆறாகிவிட்டதா? ஆனால் சூரியன் இன்னும் உதிக்கவில்லையே! என்று வியந்தனர். வியப்பு சிறிது நேரத்தில் பயம் ஆனது. ஊரிலுள்ள அனைவரையும் எழுப்பி சூரியன் உதிக்காததைக் கூறினர்.
இப்போது பதைபதைப்பு ராஜாவின் அரண்மனைக்குள்ளும் தொற்றிக்கொண்டது. படைத்தளபதி ராஜாவை எழுப்பி சூரியன் உதிக்காததைக் கூறினார். உதயநேரம் ஆகியும் சூரியன் உதயமாகாதது கண்டார் அரசர். உடனே மந்திரியை அழைத்து வரச்சொன்னார்.
மந்தரி வந்ததும், “என்னவாக இருக்கும்? ஏன் இன்று சூரியன் உதிக்கவில்லை?” என்று பரபரத்தார் ராஜா.
மேலும் படிக்க https://chevichelvam.com/kathaisolli/ஆற்று-நீர்-உனதா-எனதா