கரடி சொன்ன இரகசியம்
அடர்ந்த காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். திடீரென்று பெரிய கரடி ஒன்று எதிரே வருவதைப் பார்த்தனர். ஏய்! கரடி! கரடி! ஓடு! ஓடு! இருவரும் ஓட்டம் பிடித்தனர்.
ஓடும்போது கால் இடறி ஒருவன் மட்டும் கீழே விழுந்துவிட, மற்றவன் ஓடி மரத்தில் ஏறிக்கொண்டான்.
“டேய்! கால்ல அடிபட்டுருச்சுடா.. வந்து தூக்கிவிடுறா..” என்று விழுந்தவன் உதவி கேட்டான்.
மரத்தில் தொற்றிக்கொண்டிருந்தவன் உடனே, “எதுக்கு? கரடி வந்து என்னையுங் கடிக்கிறதுக்கா? போடா..” என்று, நண்பனுக்கு உதவாமல் தான் தப்பித்துக்கொண்டால் போதும் என்று மரத்திலேயே இருந்துவிட்டான்.
கரடி நெருங்கி வருவதைக்கண்டு, கீழே விழுந்தவன், மூச்சைப் பிடித்துக்கொண்டு பிணம் போலப் படுத்துக்கொண்டான். கரடி அவன் முகத்தருகே வந்து முகர்ந்து பார்த்தது.
அவன் அசைவற்றுக் கிடக்கவே, வந்த வழியே போய்விட்டது.
கரடி தூரப் போய்விட்டதா என்று எட்டிப் பார்த்துவிட்டு மரத்திலிருந்து இறங்கினான் மற்றவன். கீழே விழுந்தவன் மெல்லக் கையூன்றி எழுந்துகொண்டிருக்கையில், அவன் வந்து “என்ன? கரடி வந்து உன் காதுல எதோ சொன்னமாதிரி இருந்துச்சு!” என்று கேட்டான்.
“ஆமாண்டா, சொல்லுச்சு! கஷ்டம் வரும்போது காப்பாத்தாதவன்லாம் நண்பனே இல்லன்னு சொல்லுச்சு” என்றான் கோபமாக.
---
கதை மூலம்: Tinkle #004